புதிய பயணதடைப் பட்டியலை வெளியிட்டார் ட்ரம்ப்! - வடகொரியாவுக்கு தடை
குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு பல கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வகையில், எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு புதிய தடை அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா, சூடான், ஈரான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், சாட், லிபியா, ஈரான், வடகொரியா, சிரியா, வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு புதிய பயணதடையை அறிவித்து நேற்று ட்ரம்ப் அதில் கையெழுத்திட்டுள்ளார்.
தடையை மீறி அணுஆயுத சோதனை நடத்தி, தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவரும் வடகொரியா மீது பொருளாதாரத்தடை விதித்த அமெரிக்கா, தற்போது பயணத்தடையையும் விதித்துள்ளது. வெனிசுலாவைப் பொருத்தமட்டில், அந்நாட்டு அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இந்த தடை பொருந்தும் எனவும், பொதுமக்கள் அமெரிக்காவிற்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் மீது மீண்டும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் மீதான பயணத்திட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், ‘பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே என் முதல் பணி. தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிற்குள் நுழைவது பாதுகாப்பற்றது’ என பதிவிட்டுள்ளார்.
- ச.ப.மதிவாணன்