ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் ஓர் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ட்விட்டரில் கூடுதலாக தகவல்களைப் பதிவிட முடியும். முன்னதாக 140 எழுத்துக்களை மட்டுமே உபயோகிக்க முடியும். தற்போது அந்தக் கணக்கினை இரட்டிப்பாக்கி 280 எழுத்துக்களைப் பயன்படுத்த முடியும் என ட்விட்டர் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், தற்போது சில குழுக்களில் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும் என்றும், முழுமையான வடிவமைப்பிற்குப் பின்னர் இது நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஜேக் டார்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது சின்ன மாற்றம் என்றாலும், எங்கள் நிறுவனத்திற்கான மிகப்பெரிய நகர்வு. எஸ்.எம்.எஸ்-ஐப் போலவே 160 எழுத்துகளுக்குள் இருக்கவேண்டும் என்றுதான் 140 எழுத்துகளை முடிவுசெய்தோம். ட்விட்டரில் பதிவிடுவதில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவருவதில் பெருமை கொள்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
இது பல ட்விட்டர்வாசிகளுக்கு உற்சாகமூட்டும் செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனாலும், மிகப்பெரிய வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ச.ப.மதிவாணன்