
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 25ஆம் தேதி (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது.
இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட 40 அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறது. நேற்று நாகையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் பேசுகையில், ''குறிப்பிட்ட ஒரு சிலர் நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்று செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். நான் அவர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது வர முடியாது என சொல்பவர்கள் சிந்தித்துப் பார்த்து சொல்லுங்கள். இது தனிப்பட்ட திமுகவிற்கோ தனிப்பட்ட உங்களுக்கோ ஆன பிரச்சனை இல்லை. தனிப்பட்ட கட்சிக்கான பிரச்சனை இல்லை. அரசியலாக பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டின் உரிமை.
மீண்டும் இந்த திருமண விழாவின் மூலமாக எல்லா கட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ள விரும்புவது வரமுடியாதவர்கள் தயவுசெய்து வரவேண்டும்... வரவேண்டும்... என அழைப்பு விடுக்கிறேன். இதில் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சனை அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்'' என பேசியிருந்தார்.

நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.