
சென்னை கோயம்பேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (05-05-25) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “கூட்டம் போடுவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் துவங்கி வேறு வழியே இல்லாமல் திமுக கூட்டணியில் இருப்பதாக சிலர் நரேட்டிவ் செட் செய்கிறார்கள். மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் இருந்தவரை தமிழகத்தில் தலையெடுக்க முடியாத பாஜக, அவர்களது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் கால்பதிக்க முயல்கிறது. எந்த பயனுமே இல்லாத பாஜகவை அதிமுக ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?. எனக்கு ஆப்ஷனா இல்ல, நிறைய ஆப்ஷன் இருக்கு. அந்த ஆப்ஷன்லாம் நான் ஏன் ஓபன் பண்ணி வைக்கவில்லை? அதை ஏன் நான் ஹோல்ட் பண்ணி வைக்கவில்லை? எனக்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்தன. நான் நினைத்திருந்தால் விஜய்யிடமோ, எடப்பாடி பழனிசாமியிடமோ கூட்டணிக்கான ஆப்ஷனை ஹோல்டு செய்து வைத்திருக்கலாம். ஆனால், நான் அதை செய்யவில்லை. ஏன் பா.ஜ.க உடன் நாளைக்கே போய் நாங்க ரெண்டு எம்பியும், உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் என்று சொன்னால், மோடி வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா? அமித்ஷா வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?
அவ்வளவு ஏன் அகில இந்திய அளவில் மிக உயர்ந்த அதிகாரி, என்னை அழைத்து பேசினார். டெல்லியில் இருந்து அழைத்து பேசிய அந்த அதிகாரி, உங்களின் ஜனங்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்யலாம், பிரதமரை வந்து சந்திக்கலாம், திட்டங்களை வாங்கி கொடுக்கலாம் என்று கேட்டார். ஆனால் எங்கள் கொள்கைக்கும் இதற்கும் உடன்பட்டு வராது, உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறி மறுத்துவிட்டேன். நான் மட்டும் மனமாறி இருந்தால் என் வாழ்க்கையே வேறு தானே. இந்த கட்சியின் நிலையே வேறு தானே. இந்த இடத்தில் அனுமதி கொடுக்காமல் தடுக்க முடியுமா? கடைசி நேரத்தில் லாரியில் நின்று பேசுகிறோம் என்ற நிலையில் இருப்போமா? இப்படி எல்லா வழிகளும் இருந்தும் மறுத்தேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. இதனாலே கூட்டணி கதவுகள் அனைத்தையும் அடைத்தேன். நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.