
பங்களாதேசில் தமிழகம் வந்துள்ள பங்களாதேசிகள் உண்மையிலேயே கூலி வேலை செய்வதற்கு வந்தார்களா அல்லது கூலிக்கு களமிறங்கி உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறார்களா என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''மதுரை ஆதீனம் நேராக சம்பவத்தில் இருந்தவர். சம்பவத்தை அறிந்தவர் தெரிந்தவர். அவர் சொல்லக் கூடிய விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் அதிக கவனம் கொடுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் தலைசிறந்த நாடுகளின் வரிசையில் முந்திக் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் எனவும் உலகத்தினுடைய தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக உருவாகி இருக்கு நரேந்திர மோடியின் ஆளுமைக்கு களங்கம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பாகிஸ்தானத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடைய துணையோடு பஹல்காம் பகுதியில் மிகப்பெரிய தாக்குதலை பயங்கரவாதிகள் செய்திருக்கிறார்கள்.
அந்த பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்; சுற்றுலா சென்றவர்கள் 26 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட அந்த 26 உயிர்களுக்கும் ஒரு நிம்மதியை கொடுக்க வேண்டும். இந்திய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளை பிரதமர் மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றதாக ஒரு செய்தி தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இலங்கைக்கு தான் சென்றார்களா அல்லது தமிழகம் தான் தங்களுக்கு பாதுகாப்பான இடம் என்று சொல்லி அந்த பயங்கரவாதிகள் இங்கேயே தங்கி இருக்கின்றார்களா? பங்களாதேசில் இருந்து ஆயிரக்கணக்கான பங்களாதேசிகள் தமிழகத்தில் கூலி வேலை செய்வதற்கு வந்திருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் கூலி வேலை செய்வதற்கு வந்தார்களா அல்லது கூலிக்கு களமிறங்கி உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறார்களா இதுபோன்ற விஷயங்களை எல்லாம் ஆய்ந்து அறிந்து தெளிந்து பயங்கரவாதிகளை பங்களாதேஷிகளை; பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தமிழக மண்ணில் இருந்து அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது'' என்றார்.