Skip to main content

திருமண மண்டப அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுக்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு! – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Case against the order issued to refund the wedding hall advance amount! - Tamil Nadu government ordered to respond!

 

ஊரடங்கு காரணமாக ரத்தான திருமணங்களுக்கான மண்டப முன்பணத் தொகையை,  உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்த தமிழக அரசு, மார்ச் 16-ம் தேதிக்கு முன் திருமணங்களுக்கு மண்டபங்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் திருமணம் நடத்திக் கொள்ளலாம் எனவும், அதன்பின் முன்பதிவு செய்து, திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தால், முன் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அரசாணை பிறப்பித்திருந்தது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

அதில், மண்டபத்தைப் பராமரிப்பது, மண்டபத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் உள்ளதால், ரத்தான திருமணங்களுக்கான முன்பதிவு தொகையை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க நிர்பந்திக்கக் கூடாது. தற்போதுள்ள சூழலைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கு காலத்திற்கான சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். மண்டப முன்பதிவு பணத்தை திருப்பிக் கொடுப்பதென்பது சிவில் விவகாரமென்பதால், அதில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட  தடை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு,  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, அரசாணைப்படி முன்பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டியது மண்டப உரிமையாளர்களின் கடமையாகும். இதில் காவல்துறை தலையிடக்கூடாது எனக் கோருவது ஏற்புடையதல்ல என்று அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தர் வாதிட்டார்.

 

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படியும், அக்டோபர் மாதம் பிறப்பித்த ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை தாக்கல் செய்யவும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 23- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்