
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று (05-05-25) மாலை நடந்தது. அப்போது, வடகாடு கடை வீதியில் இருந்து முத்துமாரியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள நுழைவாயில் அருகே மதியத்திலிருந்து சலசலப்பு ஏற்படும் வகையில் சிலர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் தேர் நிலைக்கு வரும் நேரத்தில் நுழைவாயிலில் பேசிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒரு தரப்பினரின் குடியிருப்பிற்குள் மற்றொரு தரப்பு இளைஞர்கள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, இருதரப்பினரிடையே நடந்த தாக்குதலில் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மதன் (19) பிலாக்கொல்லை ரவி மகன் சதீஷ் (23), வேலாயுதம் மகன் சந்தேஷ் (24), கலை, அருண்பாண்டி, மனோஜ், செல்வகுமார், ஜோதிராஜ் மற்றும் வடகாடு காவலர் முத்துக்கிருஷ்ணன் உள்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரவு நடந்த பிரசச்சனையில் ஒரு வீடு, 3 பைக்கள் எரிக்கப்பட்டது. மேலும் 4 பைக்கள், கார்கள், ஒரு அரசு பஸ் கண்ணாடி, நெடுஞ்சாலை ரோந்து ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் சுமார் 17 பேர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு தரப்பினர் மோதல் சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் வடகாடு வந்தார். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘வழக்கமாக கோயில் தேரேட்ட நாளில் சில இளைஞர்கள் கடைவீதி நுழைவாயிலில் நின்று கொண்டு பிரச்சனையை தூண்டுவது போல பேசுவார்கள். இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு கடந்த மாதம் கோயில் மற்றும் விளையாட்டுத்திடல் சம்மந்தமான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அத்துமீறி நுழைந்ததால் இரு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டதால் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. அதனால் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சமயத்தில் பிரச்சனை எழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு வேண்டும். அதிக மக்கள் கூடும் தேரோட்ட நாளில் குறைவான போலீசாரே காவல் பணியில் இருந்துள்ளனர். பிரச்சனை ஏற்படும் இடமான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு இல்லாததால் அங்கு சிலரால் தொடங்கிய பிரச்சனை பிறகு குடியிருப்புக்குள் மோதாகி பலர் காயமடையவும், தீ வைப்பு பஸ் கண்ணாடி உடைப்பு வரை சென்றுவிட்டது. இதனால் அமைதியான ஊரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது’ என்கின்றனர்.