விஜய் ரசிகர்கள் இருவர் கைது..!
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில், கோவை சாலையில் உள்ள வீரக்குமார் திரையரங்கில் விஜய் நடித்த "மெர்சல்' படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று காலைக்காட்சி திரைப்படம் ஓடிய போது, திரையரங்கின் உள்ள இருந்த இரசிகர்கள் ஆர்வக்கோளாறால், திரையருகே சென்று நின்றுகொண்டு மற்றவர்கள் படம் பார்ப்பதற்கு இடையூறு செய்துள்ளனர்.
இதையடுத்து, திரையரங்கின் நிர்வாகிகள் அந்த ரசிகர்களிடம் சென்று, சமாதானம் செய்த போது, சிலர் திரையை கிழித்து ஓட்டை போட்டனர். இதனால், படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
திரையை சேதப்படுத்திய நபர்களை தியேட்டர் மேலாளர் பிடித்து, எதற்க்காக திரையை கிழித்தாய் என்று கேட்ட போது, அப்படிதான் செய்வோம், மீறினால் தியேட்டரையே தீ வைத்து கொளுத்துவோம் என்று, மேலாளரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, மேலாளர் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மயிலரங்கத்தைச் சேர்ந்த, விஜய் ரசிகர்கள் அய்யப்பன்(வயது-22), வெள்ளகோவிலில் உள்ள முத்துகுமார் நகர் மணிகண்டன்(வயது-21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
- சிவசுப்பிரமணியம்