நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை பலரும் தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து நம்மிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்ந்து நடந்திட்டே இருக்கு 2019 பிப் 12ம் தேதி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகாரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார். அங்கே உள்ள அதிகாரிகள் அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்குப் போவச் சொல்லி இருக்கிறார்கள். அந்த மனுவுடன் அங்கே சென்ற அந்த பெண்ணை மகளிர் போலீஸ் அதிகாரிகள், எஸ்.பி.யிடம் போகச் சொல்ல, அந்த பெண்ணும் எஸ்.பி.யிடம் கொடுக்க சென்றிருக்கிறார். ஆனால், எஸ்.பி.பாண்டியராஜன் டி.எஸ்.பிடம் போய் குடிக்கச் சொல்லியிருக்கிறார். டி.எஸ்.பி.யோ அந்த பெண்ணை மீண்டும் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கே போக சொல்லியிருக்கிறார். மீண்டும் அந்தப் பெண் அந்த காவல்நிலையத்திற்கே சென்றிருக்கிறது. இப்படி காவல் அதிகாரிகள் அந்தப்பெண்ணை 14 நாட்கள் புகார் மனுவுடன் அலைக்கழித்தனர்.
இதற்கிடையே நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து இந்த சம்பவத்தை புலனாய்வு மூலமாக ஆதாரத்தோடு அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தது. கடும் நடவடிக்கையை வலியுறுத்தியது. அதனால் அதிர்ந்து போன அந்தக் காவல் நிலையம் அதன்பிறகு தான் அந்த பெண்னை வரவழைத்து புதிதாக ஒரு கம்ப்ளைண்ட்ட வாங்குகிறார்கள். அதன்பிறகு தான் பிப் 24ம் தேதி எப்.ஐ.ஆரே பதிவு செய்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து நக்கீரன் தன் புலனாய்வுத் தன்மையால் இதில் நடந்த அவலத்தைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு வர, அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தது. அதன் நிமித்தமாக தான் வழக்குப் பதிவு செய்தார்கள்
ஆரம்பத்தில விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. முதன் முதலாக சபரிராஜன் வீட்ல கணினிகளைக் கைப்பற்றியது. அதில் முக்கிய தடயங்கள் ஆவணங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பெண்களின் படங்கள் முக்கியமாக நக்கீரன் அம்பலப்படுத்திய, ‘அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கன்னு..’ என்று கதர்ற படம்லாம் கைப்பற்றப்பட்டது. நான் அரசியலுக்காகச் சொல்லவில்லை. நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் வலுவாச் செயல்பட்டதன் விளைவு தான், பரிகாரமாக, தமிழ் பெண்ணின் அவலத்தைப் போக்கும் வகையில் ஒரு அருமையான தீர்ப்பு கெடைச்சிருக்கு” என்றார்.