After eating biryani, the gang beaten the hotel owner after refusing to pay

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் மது போதையில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் பரோட்டாமற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். பின்னர் பணம் தராமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உரிமையாளரைத்தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஈரோடு மரப்பாலம் பகுதியில் அந்த 4 பேர் கொண்ட கும்பல் சுற்றித்திரிந்துள்ளது. இவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பொதுமக்கள் அந்த கும்பலை தர்ம அடி கொடுத்து பிடித்தனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், புவனேஸ்வரன் எனத்தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் ஓட்டலில் தகராற்றில்ஈடுபட்டு தலைமறைவான சூர்யா மற்றும் மாதேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஈரோடு ஓட்டலில் மதுப் பிரியர்கள் தகராற்றில் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது.