
காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தாகக் கூறி கடந்தாண்டு மே மாதம் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில், காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பெண் காவல்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, சவுக்கு சங்கர் ஜானீனில் வெளியே வந்தார்.
இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, இன்று (24-02-25) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக தரக்குறைவாக பேசி வருகிறார். ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, சவுக்கு சங்கர் எந்த வீடியோக்களையும் பதிவிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை அவர் மீறியிருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ‘சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும். அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, சவுக்கு சங்கரின் கோரிக்கையை நிராகரித்தது.