
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’இந்தியாவில், ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் இந்திய பொது சுகாதாரத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த மர்ம காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு, சிக்கன்குனியாவின் பாதிப்பு 1950ம் ஆண்டு முதல் இருந்து வந்தாலும்,தீவிர பாதிப்பென்பது கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில், 2.5% பேர் உயிரிழக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இந்த காய்ச்சல்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவை குணப்படுத்த உரிய மருந்து இல்லாத நிலையில், தொடர் கண்காணிப்பு, ஓய்வு,திரவ உணவுகள் மூலமே இதனை சரிசெய்ய இயலும். இதற்கான தடுப்பூசியும் ஏதும் இல்லை. வாழிடங்கள், பயணிக்கும் இடங்களில் கொசுக்கள் கடிப்பதைத் தடுப்பதன் மூலமே இதனை தடுக்க இயலும். டெங்கு பாதிப்பின் அறிகுறியைக் கண்டறியவே 3 முதல் 14நாட்கள் ஆகின்றன. தமிழகத்தில் டெங்கு,சிக்கன் குனியா மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவது குறித்த செய்திகள் தினந்தோறும் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றன.
கடந்த ஆண்டு, இந்த காய்ச்சல்களுக்கு100க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொசுவால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும்,குப்பைகள் தேங்காமல் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல்வேறு கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கான பலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிப்பு அதிகரித்து மூக்கு வழியாக ரத்தம் கசியும் நிலையிலும், உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறியுள்ளது. பல கிராமங்கள்,டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தவறி விட்டது. டெங்குவால் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகள் இல்லாமல்,சாதாரண வார்டுகளில் சிகிச்சை அளிப்பது போதுமானதாக இல்லை. ஆகவே, தமிழகத்தில் கொசுவைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.25 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு இந்த உண்மையை மறைத்து வருகிறது. மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளனாக இருந்து வருகிறது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை.
டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சாதிக்கலவரங்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும்,விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. ஆகவே டெங்குவால்,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்த போது, கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிக பேர் அதாவது 16301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ள்ளதாகவும், 52 பேர் இறந்துள்ளதாகவும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்" கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களே டெங்கு அதிகளவில் பரவியதற்கு காரணம். ஆனால் தற்போது கொசு ஒழிப்பு, கொசுக்களைக் கட்டுப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டு, டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால், வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் டெங்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
தற்போது டெங்கு பாதிப்பால் இறப்பு இல்லை. டெங்குவால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மனுதாரர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து இறப்புகளுக்கும் டெங்கு காரணமல்ல. ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், கொசு ஒழிப்பில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு எனவே, பொதுமக்களும் சுகாதாரத்தை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனக்கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)