Skip to main content

"பிரதமர் உழவர் நிதி முறைகேட்டில் ரூ.123 கோடி பறிமுதல்" - ககன்தீப்சிங்பேடி பேட்டி!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Rs 123 crore confiscated from PM's farmer fun: Kagandeep Singh Bedi interview!

 

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள  மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்வதற்காகக் கடலூர் மாவட்டத்திற்குத் தமிழக வேளாண் துறை உற்பத்தி ஆணையரும், கடலூர் மாவட்டத்திற்கான கரோனா கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி நேற்று வருகை தந்திருந்தார். 
 

மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவர்,  செய்தியாளர்களிடம் பேசுகையில் "தமிழகத்தில் நல்ல அளவுக்கு மழை பெய்துள்ளதால் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.


30 ஆண்டுகளுக்குப் பின் 4.12 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 5.90 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் இரண்டு மாதங்களில் 14 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சாகுபடிக்காக 1.90 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படும் என்பதால் அதற்கான கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டு இதுவரையில் 1.50 லட்சம் மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டுள்ளது. 45 கிலோ யூரியா மூட்டைக்கு ரூபாய் 266.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். எந்தவொரு மாவட்டத்திலும் யூரியா தட்டுப்பாடு இருக்கக்கூடாது அதனை வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். யூரியா தட்டுப்பாடு எங்கேனும் ஏற்பட்டால் அதுகுறித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தால், தடையின்றி யூரியா கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உரம், யூரியாக்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பயிர் காப்பீடு தொடர்பாக புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரத்துக்குள் பயிர் காப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். நெல்லுக்கு நவம்பர் 9ஆம் தேதியும், மக்காச் சோளத்துக்கு வரும் 31ஆம் தேதியும் கடைசி நாளாகும்" என்றார்.

 

cnc

 

மேலும் அவர் கூறுகையில், "பிரதம மந்திரி கிசான் நிதி திட்ட முறைகேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட விவசாயி அல்லாதவர்களிடம் இருந்து இதுவரையில் ரூபாய் 123 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுவிடும். 

 

மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய 101 பேர், சி.பி.சி.ஐ.டி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 95 சதவீதம் வரையில் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றார். 

 

இந்த ஆய்வின்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சங்கரா, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்