The man who climbed a palm tree and down the palm juice

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது பெரியதாழை கிராமம். இந்த கிராமத்தில் பனை மரத்தில் இருந்து கள் இறக்கும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் உழவர் பேரவை சார்பில் இன்று (15.06.2025) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பனை மரத்தில் ஏறிக் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்காக அங்குள்ள சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் பிரத்தியேகமாக படிக்கட்டுகள் போல 2 அடி இடைவெளியில் கம்புகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இந்த பனை மரத்தில் ஒரு கலயம் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சீமான் பனை மரத்தின் மீது ஏறி கலயத்தில் இருந்த கள்ளை எடுத்து கீழே இறக்கி இந்த போராட்டத்தை நிறைவு செய்தார். முன்னதாக இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது.

Advertisment

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் கள் மது கிடையாது. அது உணவின் ஒருபகுதி என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டமானது நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதே சமயம் இந்த போராட்டத்தை ஒட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.