CM MK Stalin participates Opening of water from Kallanai for irrigation

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 92வது ஆண்டாக கடந்த 12ஆம் தேதி (12.06.2025) பாசனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். இத்தகைய சூழலில் தான் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. இந்நிலையில் கல்லணையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.06.2025) நீரை திறந்து வைத்தார். அதாவது அணையின் 3 மதகுகள் வழியாகக் காவேரி ஆற்றில் தண்ணீரானது திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisment

அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்களையும் நெல்மணிகளையும் காவேரி ஆற்றில் தூவினார். முதற்கட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்கத் தண்ணீர் திறப்பானது படிப்படியாக உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் முப்போக பாசன வசதி பெறுவதற்காகக் கல்லணையின் கால்வாயில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நீரைத் திறந்து விட்டுள்ளார். எனவே இந்த கால்வாயிலிருந்து நீரைப் பிரித்து அனுப்பக்கூடிய பணிகள் இன்று இரவில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதன் மூலம் டெல்டா மாவட்ட பகுதிகளில் முப்போக பாசன வசதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தமிழக முதல்வர் ஒருவர் நேரடியாகக் கல்லணை கால்வாய் பகுதிக்கு வந்து தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறை ஆகும். அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்லணையில், காவிரி உபவடிநிலப்பகுதி மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகியவற்றின் பாசன உள்கட்டமைப்புகளில் விரிவுப்படுத்துதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்த புகைப்படக்காட்சிகளை பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, எஸ். முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர். தயாளகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.