Skip to main content

புளூவேல் விளையாட்டையும், ரம்மி சூதாட்டத்தையும் தடை செய்க! - கீ.வீரமணி அறிக்கை

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
புளூவேல் விளையாட்டையும், ரம்மி சூதாட்டத்தையும் தடை செய்க! - கீ.வீரமணி அறிக்கை

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் புளூவேல் விளையாட்டையும், ரம்மி சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,

நீலத் திமிங்கலம் (புளூவேல்) என்பது ஒரு ஆன்லைன் தற்கொலை விளையாட்டாகும். இதில் பங்கேற்பவர்கள் 50 நாட்களுக்கு பல சவாலான சவால்களை முடிக்க வேண்டும்.  50 நாட்களும் விளையாடுவோருக்கு கடினமான சவால்கள் வழங்கப்படும். திகில் நிறைந்த திரைப்படங்கள், அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பல்வேறு சவால்கள் மற்றும் கைகளில் புளூ வேல் என கிழித்துக் கொள்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.  

ஒவ்வொரு சவாலை முடிக்கும் வரை விளையாட்டின் படைப்பாளர்களுக்கு ஒளிப்பட ஆதாரங்களை அனுப்புமாறு கேட்கப்படுகிறார்கள். அவர்களிடம் அந்த ஒளிப்படங்களை ஆதாரமாக அனுப்புமாறு கேட்கிறார்கள் அல்லது அச்சுறுத்தல்களை அனுப்புவார்கள். புளூ வேல் இறுதி சவால் போட்டியாளர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்க வேண்டும்.

அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று, அதற்கான வழிகாட்டுதலை அவ்விளையாட்டின் ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்துவதன் பேரில் சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். மதுரையில் 19 வயதான ஜெ.விக்னேஸ்வரன் என்னும் கல்லூரி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ருசியாவில் உருவாக்கப்பட்ட இந்தக் கேடு கெட்ட விளையாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரியது.

மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. இதே போன்ற இணையதள விளையாட்டுகள் ஒருபுறம், ரம்மி சர்க்கிள்.காம் என்ற பெயரில் சூதாட்டம் நடக்கிறது. வெளிப்படையாக இந்த சூதாட்டம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

அறிவியல் சாதனங்களை விஞ்ஞான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவுக்கும், சூதாட்டத்திற்கும், அறிவை நாசப்படுத்துவதற்கும் பயன்பட அனுமதிக்கப்படக்கூடாது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இவற்றைத் தடை செய்ய வேண்டும். இந்த வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்