Skip to main content

கல்லூரி அருகே “டாஸ்மாக்” கடை திறப்பு: பெண்கள் போராட்டத்தால் மூன்று மணி நேரத்தில் கடை மூடல்..!

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
கல்லூரி அருகே “டாஸ்மாக்” கடை திறப்பு: பெண்கள் போராட்டத்தால் மூன்று மணி நேரத்தில் கடை மூடல்..!

நாடு முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 190 கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் செயல்பட்டு வந்த “டாஸ்மாக்” மதுக்கடையும் மொடப்பட்டது.

இதனிடையே, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மூடப்பட்ட “டாஸ்மாக்” கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு மதுபாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் இறக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மீண்டும் திறந்தனர். இதுகுறித்த அப்பகுதி மக்களிடம் செய்தி பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து திறந்திருந்த “டாஸ்மாக்” கடையை முற்றுகையிட்டனர்.

பின்னர் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பாட்டில்களை வெளியில் தூக்கி வீசி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் கோவில்கள், பள்ளிகள், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என்று நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். தற்போது இரவோடு இரவாக அதிகாரிகள் மீண்டும் இந்த கடையை திறந்து உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்...” என்று அப்பகுதி பெண்கள் கூறினார்.

இதையடுத்து போராட்டம் நடத்த இடத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. பதட்டம் அதிகரித்தது,. இதனால், காவல்துறை அதிகாரிகள் திறந்திருந்த “டாஸ்மாக்” கடையை மூடியதோடு, மீண்டும் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்