Skip to main content

ஆம்னி பேருந்து: ‘கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Madras High Court Passengers can be picked up and dropped off at koyambedu Omni Bus

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசுப் பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாகத் தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், பேருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடும். எனவே கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கொண்டு வந்ததன் நோக்கமே வீணாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று (09-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது,  ‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.