/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A3606.jpg)
வரும் மே பதினொன்றாம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பாமக சார்பில் வன்னியர் சங்கத்தின் 'சித்திரை முழு நிலவு மாநாடு' நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதற்கான அழைப்பிதழை பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாமக சார்பில் மரக்காணம் அருகே நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஏற்பட்ட மோதலில்நான்கு பேர் உயிரிழத்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் இந்த வருடம் நடத்தப்படும் மாநாட்டில் சம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் 'மாநாடு நடைபெறும் நாளில் கிழக்கு கடற்கரைச் சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது' என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாநாட்டிற்கு ஏற்கனவே 42 நிபந்தனைகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, 'காவல்துறை கொடுத்துள்ள அத்தனை நிபந்தனைகளையும் கண்டிப்பாக பின்பற்றுவோம். எந்த வித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் மாநாட்டை நடத்துவோம்' என உறுதி அளித்தார்.
அனைவரின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'மாநாட்டில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது தொடர்பான உத்தரவாதத்தை வடக்கு மண்டல ஐஜியிடன் பாமக வழங்க வேண்டும். மாநாட்டிற்கு வருபவர்கள் எந்தவித ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை எடுத்து வரக்கூடாது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் காவல்துறையிடம் முறையாக அனுமதிபெற்று வர வேண்டும். பாதுகாப்பிற்காக கூடுதல் காவல்துறையை நிறையப் பயன்படுத்த வேண்டும் என கூடுதல்நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)