Skip to main content

“இந்திய ராணுவத்திற்கு ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது” - முதல்வர்!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

CM mk stalin says This is the time to express united support for the Indian Army 

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன.  பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேரணி நடைபெறும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை (10.05.2025) மாலை 05.00 மணிக்குச் சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும். தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்