
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதே சமயம் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனத் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக மாணவர்கள் nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும், 99944 33456, 73730 26456, 96559 12456 என்ற உதவி எண்கள் மூலம் தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.