கீரமங்கலத்தில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட வருவதாக தகவல் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்

கீரமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் திடீரென முற்றுகையிட வருவதாக தகவல் பரவியால் 100 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டது. கடை திறப்பு நேரமும் தாமதமானது.
டாஸ்மாக் கடை :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. ஒரு டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டிருந்த 2 டாஸ்மாக் கடைகள் பழைய இடத்திலேயே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
முற்றுகையிட பெண்கள் :
இந்த நிலையில் வியாழக் கிழமை ஒரு டாஸ்மாக் கடையை பெண்கள், மற்றும் மகளிர் அமைப்பினர் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. அதனால் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) இளங்கோ, ஆலங்குடி, காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிபு, மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள், என் சுமார் 100 போலிசார் குவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை தடுப்புகள் வைத்து அடைத்து பெண்கள் உள்ளே செல்ல முடியாதபடி நின்றனர். மேலும் கீரமங்கலம் வருவாய் துறை ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட வருவதாக வந்த தகவலையடுத்து 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடை 2 மணிக்கு பிறகே திறக்கப்பட்டது. மாலை வரை பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்த வராததால் போலிசார் திரும்பிச் சென்றனர். கீரமங்கலத்தில் திடீரென போலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது.
-இரா. பகத்சிங்