
சமோசா வாங்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் பட்டப்பகலில் கடை உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் முன்னாள் கவுன்சிலர் முகேஷ் சைனியின் உறவினராவார். ராகேச்ஜ் ஃப்ரூக்நகர் பகுதியில் டீ-சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், இளைஞர்கள் குழு ஒன்று ராகேஷ் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ராகேஷுக்கும் இடையே சமோசா வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் குழு, ராகேஷுக்கு கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீஸுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இளைஞர்களை எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று காலை, ராகேஷ் கடைக்குச் சென்ற அந்த இளைஞர்கள், துப்பாக்கியை எடுத்து ராகேஷை நோக்கை ஆறு முறை சுட்டனர். இதில், ராகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தியதில், சமோசா வாங்குவதில் ராகேஷுக்கும், பங்கஜ் மற்றும் நண்பர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பங்கஜ் ராகேஷை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் கடைக்காரர்கள் கடைகளை மூடி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புகார் அளித்திருந்த போதே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், போலீஸுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஏசிபி சதார் யஷ்வந்த், குற்றவாளிகள் இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து, கூட்டத்தை சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும், போராட்டக்காரர்கள் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ஃபரூக்நகர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனையடுத்து, ராகேஷை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.