
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.5.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். கீதாஞ்சலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஏப்ரல் மாதம் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும், அதன் விடுதியையும் திறந்து வைத்தோம். அது எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்வதற்காக நான் இங்கு வந்தேன். மக்களிடையே இந்த மருத்துவமனை பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 1300 வெளிநோயளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயளிகள் சிகிச்சையும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதே மாதிரி எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் போன்ற நவீன வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது.
அதனை மக்கள் எப்படி பயன்படுத்திக்கிறார்கள் என்று பார்க்க வந்தேன். இதுவரைக்கும் மக்கள் வெளியில் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணம் கொடுத்து பரிசோதனை செய்து வந்தனர். இப்போது எவ்வித பணமும் செலவில்லாமல் இங்கேயே எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் எல்லாம் எடுத்துக் கொடுக்கிறார்கள். அதே போன்று மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன். அவர்களிடம் வசதிகள் எல்லாம் இப்படி இருக்கிறது, ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டேன். எந்த குறையும் இல்ல திருப்தியா இருக்கிறோம். ரொம்ப சிறப்பா இருக்குன்னு சொன்னார்கள். எனவே கூடுதலாக என்ன வசதி தேவைப்படுகிறதோ அதெல்லாம் கேட்டு அதையும் விரைவில் செய்து கொடுப்பதற்கு இந்த அரசு தயாரா இருக்கிறது” எனத் தெரிவித்தார்.