
விமான நிலையம் வழியாக சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. அப்போது விமானத்தில் வந்த பயணிகள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்த பொழுது மூன்று பெண் பயணிகள் சந்தேகப்படும் விதமாக பெரிய சூட்கேஸ்களை வைத்திருந்தனர்.
அதனை சோதனையிட்ட பொழுது 34 கிலோ கலப்பின கஞ்சாவும், சாக்லேட் கலந்த 15 கிலோ மெத்தப்பட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை கடத்தி வந்த கவிதா ராஜேஷ், சையத் சையது, சிபி பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பெண்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பும் இதேபோல விமான பயணத்தின் போது போதைப் பொருட்களை இவர்கள் கடத்தி உள்ளார்களா என்பது குறித்தும், கொண்டு வந்த போதைப் பொருள்கள் யாருக்காக கொண்டு வரப்பட்டது, எங்கிருந்து போதைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.