
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட பத்து மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அனுப்பியும் அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.
இந்த வழக்கில் 142 சட்ட விதியை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததோடு மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் சட்டப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே இதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரம் சட்டமன்றத்திற்கா அல்லது அமைச்சரவைக்கா அல்லது மாநில அரசினுடைய தலைவராக இருக்ககூடிய ஆளுநருக்கா என எந்தவொரு தெளிவும் இல்லை' என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையானது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.