ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.5கோடி மோசடி:
காவல்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2.5கோடி வரை மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவர்கள் மீது காவல்துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கோவை கணபதி லட்சுமிபுரம் பகுதியில் சூர்யா கணபதி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தந்தை, மகனான ஜெயபிரகாஷ், ஜித்து என்பவர்கள் கடந்த 2005 முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஏலசீட்டு நடத்தி வந்துள்ளனர். ரூ.6ஆயிரம் முதல் 10லட்சம் ரூபாய் வரையில் பணம் செலுத்தும் முறையில் நடந்து வந்த ஏலச்சீட்டு கடந்த 2 ஆண்டுகளாக முறையாக பணத்தை திருப்பி தராததால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, உள்துறை செயலாளர் என பல்வேறு துறைகளுக்கு செலுத்திய பணத்தை மீட்டுத்தருமாறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும், குறைந்தபட்சம் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 250 பேரிடமிருந்து ரூ.2.5கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும், மோசடி செய்தவர்களுக்கு கேரளாவில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறும் பாதிக்கப்பட்டவர்கள், இதற்கு மூலக்காரணமான கோவையை சேர்ந்த நிறுவனத்தின் மேலாளாராக இருந்த ஜவஹர் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- அருள்