
ரூ. 24.92 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தை அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ரூ.1.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ‘ஆட்சியும் வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை ஆச்சு’ எனும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொருளாதார ஆலோசனைக் குழுவின் மின்துறை துணைக் குழுத்தலைவர் அரவிந்த் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிறப்பு செயலாக்கத் திட்டம் குறித்து அத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த இரண்டு கூட்டங்களில் அறிமுகப்படுத்திய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இன்றைய கூட்டத்தில் பொதுப்பணித்துறை, துறைமுகங்கள், சிறு துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.