Skip to main content

டெங்கு விபரீதம்; பெண் குழந்தை பிறந்த எட்டாம் நாளில் தாய் பலி

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
டெங்கு விபரீதம்; பெண் குழந்தை பிறந்த எட்டாம் நாளில் தாய் பலி

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு ஊராட்சி சித்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். பி.வி.சி., பைப் நிறுவன ஊழியர். இவர் மனைவி தீபா (வயது-25). இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தீபா கர்ப்பமானார். அந்தியூரில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த, 1-இல் தீபா மகப்பேறுக்காக சேர்ந்தார்.

அன்றிரவு தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அத்துடன், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்த நிலையில், 2-ஆம் தேதி தீபாவை மருத்துவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற மறுநாளே தீபாவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பால், அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். சாதாரண காய்ச்சல் எனக்கூறிய மருத்துவர் தீபாவுக்கு ஊசி போட்டு மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இரண்டு நாளாக காய்ச்சல் குறையாததால், மீண்டும், அக்டோபர் எட்டாம் தேதியன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தீபாவை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையில், தீபாவுக்கு டெங்கு தாக்குதலுக்கு உண்டான அறிகுறி இருந்தது தெரிந்தது. உடனடியாக தீபாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை தீபா உயிரிழந்தார். முறையான் ஆய்வு மேற்கொண்டு டெங்கு என்பதை கண்டறியாமல் சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை மீது, உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த எட்டு நாளில் தாய் உயிரிழந்த நிகழ்வு உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்