Skip to main content

டெங்கு காய்ச்சல்; கொங்கு மண்டலத்தில் நேற்று 5 பேர் பலி

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
டெங்கு காய்ச்சல்; கொங்கு மண்டலத்தில் நேற்று 5 பேர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள உடுமலை சாலையில் உள்ள தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பாதிரியார் ஸ்டீபன்ராஜ். இவருடைய மனைவி தேன்மொழி.

தேன்மொழி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜெர்வின் டிக்சன் (வயது-12). இவர் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த வாரம் ஸ்டீபன்ராஜ், தனது மகன் ஜெர்வின் டிக்சனை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த கடந்த இரு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்தார். இதற்கிடையில் ஜெர்வின்டிக்சனுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்துள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் ஜெர்சின் டிக்சனை பரிசோதனை செய்து விட்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் கோவைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, உடனே கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெர்வின் டிக்சன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான்.

பொங்கலூர் அருகே உள்ள மஞ்சப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது-44). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சண்முகப்பிரியா (வயது-11). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சண்முகப்பிரியா திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சண்முகப்பிரியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கொமாரபாளையம் கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி மாலதி. இவர்கள் கட்டிட கம்பி கட்டும் தொழில் மற்றும் விவசாய கூலிவேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென குழந்தைக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை தனுஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் வேலு. இவர்    தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார். இவரது மகன் வாகீஸ்வரன் என்ற ஆறு வயது  குழந்தை 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வாகீஸ்வரன் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதையடுத்து, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி வாகீஸ்வரன் நேற்று இறந்து போனான்.

கோவை அரசு மருத்துவமனையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லாபு என்பவரின் மகள் பூர்ணிமாராம் (வயது -22). என்பவர் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த நான்கு நாளுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூர்ணிமாராம் நேற்று பரிதாபமாக இறந்தார். வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் கொங்கு மணடலத்தில் உயிரிழப்புகளும் கூடி வருகிறது.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்