Skip to main content

அதிகரிக்கும் நகை பறிப்பு சம்பவம்! - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மர்மகும்பல் கைவரிசை!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


கோவையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அணிந்திருந்த நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி போலீஸ் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி இந்திராணி (வயது 62). ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தார்.

 

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கு தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டார். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், போத்தனூர் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (39). அரசு பள்ளி ஆசிரியை. இவர் வீடு அருகே நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மகேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட மகேஸ்வரி நகையை பறிகொடுக்காமல் இறுக்கி பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே வாலிபர் அங்கிருந்து ஓடி, அங்கு மோட்டார் சைக்கிளில் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பினார்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் நடைபெற்ற 2 நகைபறிப்பு சம்பவங்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வாலிபர் ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் தயாராக நிற்கிறார். மற்றொரு வாலிபர் நகையை பறித்துக் கொண்டு, தயாராக நிற்கும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்லும் காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பைக்கில் தப்பித்த வழிப்பறி திருடனை மடக்கிப் பிடித்த சிறுமி... குவியும் பாராட்டுகள்!

Published on 02/09/2020 | Edited on 03/09/2020

 

girl - punjab - mobile - snatchers - escape - catch

 

பஞ்சாப் மாநிலத்தில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியின் செல்ஃபோனை பிடுங்கி, பைக்கில் தப்பமுயன்ற திருடர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு சாலையில், 15 வயது சிறுமி குசும் குமாரி, டியுஷன் முடித்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி திருடர்கள் இருவர், அந்தச் சிறுமியிடம் இருந்து ஃபோனை பிடுங்கினர். ஆனால், உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிறுமி, மொபைல்ஃபோனை பிடுங்கியவனை கீழே இழுத்து தள்ளிவிட்டாள். அவன் விழுந்ததும் சற்றும் எதிர்பாராமல், அந்தச் சிறுமையை தாக்கி தப்பிக்க முயன்றான். தாக்குதலுக்கு அஞ்சாத சிறுமி, தொடர்ந்து அவனிடம் போராடி, ஃபோனை மீட்டார். ஆனால், அதோடு விடாமல் அவனையும் பிடித்தார். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் வரத் தொடங்கினர். இதனால், அச்சமடைந்து பைக்கை ஒட்டிவந்தவன் அங்கிருந்து தப்பிவிட்டான். ஆனால், ஃபோனை பறித்தவன் மாட்டிக்கொண்டான்.

 

இந்நிலையில், காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பலர் சிறுமியின் இந்த துணிகர செயலைப் பாராட்டி வருகின்றனர்.

 

 

Next Story

செல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

cellphone - snatch - thiruppathur - 4 looters

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைக் குறிவைத்து செல்ஃபோன்களை கொள்ளையடிக்கும் சம்பவம் (ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்) தொடர் கதையாக இருந்துவந்தது. 

 

இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வடகரை டாஸ்மாக் கடை அருகே செல்ஃபோன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற கார்த்திக் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை உமராபாத் காவல்துறையினர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கைது செய்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாங்கள் தான் செல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்று வாணியம்பாடியைச் சேர்ந்த கோபி மற்றும் கண்ணன் ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வெங்கடேசன், கண்ணன், கோபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12 செல்ஃபோன்களை பறிமுதல் செய்துனர். 

 

நால்வரையும், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.