/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_28.jpg)
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத்தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)