Skip to main content

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஹத்ராஸில் நடந்தது விபத்து அல்ல; கொலை” - வெளியான பரபரப்பு தகவல் 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Boleh Bala lawyer said that the masked gang was involved in Hathras incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றிய பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இதனிடையே வீடியோ வாயிலாக பேசிய சாமியார் போலே பாலா, “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இது குறித்து பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது விபத்தோ, சதி திட்டமோ எதுவாக இருந்தாலும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “சாமியார் போலே பாலாவின் பேச்சைக் கேட்க நிறைய பேர் வந்திருந்தனர். அதில் முகங்களை மறைத்தப்படி முகமூடி அணிந்தப்படி கூட்டத்திற்குள் 15 முதல் 16 நபர்கள் வந்திருந்தாக, நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள். முகமூடி அணிந்த நபர்கள் கூட்டத்திற்கு வரும் போது கையில் விஷக்கேனை கொண்டு வந்து, பின்பு அதனைக் கூட்டத்தில் வைத்து திடீரென திறந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை பார்த்தேன். அவர்கள் யாரும் காயப்பட்டு உயிரிழக்கவில்லை; மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அவர்களின் பணியை செய்துவிட்டு தப்பித்து செல்ல வசதியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனையும் சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்க வேண்டும். இது விபத்து அல்ல; கொலை” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
The court gave a sensational verdict to the youth on incident of girl child

உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டின் போது அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, இந்தச் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசோக் குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால், கூடுதலாக 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.