பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டாய இனிப்பு, பட்டாசு! - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ. 750 வரை இனிப்பு, பட்டாசு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பால் கூட்டுறவு சங்கம் :
தமிழகம் முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக பால் கொள்முதல் செய்து, அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலில் இருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலில் அடர்வு திறன் குறைவாக உள்ளது என்று பால் கொள்முதல் அளவை குறைத்து வருவதால் பால் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டு வந்தனர். அதனால், பாலை சாலையில் கொட்டி பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இனிப்பு, பட்டாசு கட்டாயம் :
இந்த நிலையில் ஆவின் உற்பத்தி பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்து வந்த நிர்வாகம் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்களிடம் கட்டாயமாக கொடுத்து பணத்தை பால் கொள்முதல் பணத்தில் பிடித்தம் செய்து கொள்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பால் கூட்டுறவு சங்கங்களில் தீபாவளிக்காக இனிப்பு மற்றும் பட்டாசு ரூ. 750 முதல் ரூ. 1000 வரை ஒவ்வொரு உறுப்பினரும் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அதனால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் :
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் நம்மிடம், ‘தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்காண கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை பால் விற்பனை செய்யும் நிலையில் தீவனம் போன்ற பொருள்களுக்கு செலவு அதிகமாக ஆகிறது. இந்த நிலையில் பட்டாசு, இனிப்பு கட்டாயம் வாங்க வேண்டும் என்றால் மாடுகளுக்கு தவிடு, தீவனம் வாங்கமுடியாத நிலை வரும். அதனால் கட்டாயப்படுத்தி பட்டாசு, இனிப்பு கொடுக்கக்கூடாது. இந்த நிலை தொடர்ந்தால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவோம் என்றனர். மேலும் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு ஆண்டுக்கு ஒரு முறை டன்னுக்கு அரைக்கிலோ சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதேபோல, பால் உற்பத்தியாளர்களுக்கும் ஆவின் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றனர்.
- இரா.பகத்சிங்