Skip to main content

தனியே தன்னந்தனியே… யானையை அநாதையாய் அலையவிட்ட கொடூர அரசு

Published on 25/07/2018 | Edited on 25/07/2018

 

கண்ணு சரியாக தெரியாமல், பக்கத்தில் வந்து கூச்சல் போட்டாலும், பட்டாசு வெடித்தாலும் எதுவும் செய்ய முடியாமல் யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் பயந்துப்போய் வாழ்கிறது பெரும் பலம் கொண்ட அந்த காட்டு யானை.
 

திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் அருகிலுள்ள பட்டறைக்காடு என்கிற மலை கிராமத்தில் கடந்த 15ந் தேதி ஒற்றை யானை, தன்னந்தனியாக அந்த கிராமத்தின் வழியாக செல்லும் போளுர் டூ ஜம்னாமரத்தூர் சாலையில் 2 கி.மீ தூரத்துக்கு நடந்து சென்றது. அதன்பின்னால் பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு வந்து கூச்சல் போட்டும் எதுவும் செய்யாமல் எதிர்ப்பு சத்தம் கூட போடாமல் பயந்தப்படி எங்கு போவது எனத்தெரியாமல் தனக்கு துணைக்கு யாரும்மில்லையே என மீண்டும் மலைமீதேறி காட்டுக்குள் போய்விட்டது. 

 

 

 

 

ஜவ்வாதுமலையையே வலம் வருகிறது. இன்று நேற்றல்ல அடிக்கடி இந்த யானை ஊருக்குள் வருகிறது. பெரிய அளவில் எந்த சேதமும் செய்வதில்லை. இதுவா காட்டு யானை என கேள்வி கேட்கும் அளவுக்கு பூனைப்போல் சாதுவாக உள்ளது என்றார்கள் அப்பகுதி மக்கள். என்ன நடந்தது எதனால் சாதுவானது என விசாரித்தால் 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவத்தை சொல்கிறார்கள் வனத்துறையினரும், அப்பகுதி பொதுமக்களும்.
 

ஆந்திராவின் குப்பம் காட்டுப்பகுதியில் இருந்து தமிழகத்தின் ஆம்பூர் – ஒடுக்கத்தூர் இடையே ஜவ்வாதுமலையின் வடக்கு பகுதியில் மலையேறி மேற்கு பக்கமாக கீழிறங்கி நீப்பத்துறை வழியாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி, சேலம் மாவட்ட காடுகளுக்கு சென்றுவிடும். பின்னர் அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடங்கி வந்த வழியிலேயே திரும்பி ஆந்திரா குப்பம் காடுகளுக்கு சென்றுவிடும். இதுதான் அதன் வழித்தடம். 
 

ஆந்திரா குப்பத்தில் இருந்து வரும் யானைகள் ஆம்பூர் பச்சக்குப்பம் என்கிற இடத்தில் தான் சாலையை க்ராஸ் செய்து ஜவ்வாதுமலை மேல் ஏறும். 2000 ஆம் ஆண்டு தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் சென்னை – பெங்களுரூ இடையே தங்கநாற்கர சாலை அமைக்கப்பட்டது. யானைகள் க்ராஸ் செய்யும் அந்த இடத்தில் அகலமான சாலைகள் அமைக்கப்பட்டு, அந்த சாலைகளை யாரும் க்ராஸ் செய்ய முடியாதபடி இருபுறமும் தடுப்பு வேலிகள் போடப்பட்டதால் யானைகளின் பயணப்பாதை அடைப்பட்டது. இதனால் ஆந்திரா குப்பம் காட்டில் இருந்து ஜவ்வாதுமலைக்கு வந்த 12 யானைகளால் மீண்டும் ஆந்திரா வனத்துக்கு செல்ல முடியவில்லை. வேறு வழிப்பாதையும் அதனால் உருவாக்க முடியவில்லை. இதனால் யானைகள் ஜவ்வாதுமலைக்கே திரும்பின. 
 

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் காடுகளையே சுற்றி சுற்றி வந்தன. அப்படி வந்தபோது 2008ல் மின்சாரம் தாக்கி ஜம்னாமத்தூர் கல்யாணமந்தை என்ற கிராமத்தில் ஒரு குட்டி யானையும், யானைகளுக்கு இடையிலான மோதலில் தருமபுரியில் இரண்டு யானை, உணவு கிடைக்காமல் இரண்டு யானை என 6 யானைகள் இறந்தன. மீதியிருந்தது 6 யானைகள். அதில் 5 பெண் யானைகள், 1 ஆண் யானை. 
 

யானைகள் சுபாவப்படி, இனப்பெருக்க எண்ணம் வரும்போது மட்டுமே ஆண் யானை, பெண் யானையை தங்கள் அருகில் சேர்க்கும், மற்றபடி சேர்க்காது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டத்தில் இருந்து பிரிந்தது இப்போது தனியாக சுற்றிவரும் இந்த ஆண் யானை. 5 பெண் யானைகள் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்ய 2013ல் அவைகளுக்கு மயக்க ஊசிப்போட்டு பிடித்துப்போயினர் வனத்துறையினர். எந்த பிரச்சனையும் செய்யாமல், தன்னந்தனியாக சுற்றிவருவதால் அந்த ஆண் யானையை வனத்துறை கண்டுக்கொள்ளவில்லை. தற்போது அந்த யானை தான் ஊருக்குள் வந்து செல்கின்றது என்கிறார்கள்.
 

 

 

இதுபற்றி திருவண்ணாமலையை சேர்ந்த இயற்கை விவசாயியும், சமூக ஆர்வலருமான ஜெயகாந்தன் நம்மிடம், 
 

மனிதன், தான் மட்டுமே சொகுசாக இந்த உலகில் வாழ வேண்டும் என நினைக்கிறான், அதனால்தான் விலங்குகள் பற்றிய கவலையில்லாமல் அதன் வாழ்விடத்தை, பயணப்பாதையை அழிக்கிறான், தன்னைப்போன்று  விலங்குகளும் ஒரு உயிர் என்கிற அக்கறை மக்களுக்கே இல்லாதபோது அரசுக்கு எப்படியிருக்கும். காடுகளின் வழியே சாலைகள் அமைக்கப்படுவதால் அதன் பரப்பளவு சுருங்குகின்றன, விலங்குகளின் வழித்தடம் அழிப்படுகின்றன. 
 

விலங்குகளின் வழித்தடத்தை பற்றிய ஞானம் இல்லாமல் சாலைகள் போடப்படுகின்றன. யானைகள் எப்போதுமே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல இடபெயர்ச்சி செய்து வாழும் தன்மை உடையது. யானைகள் இடப்பெயர்ச்சி ஆகும் காலங்களில் யானைகளை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். யானைகள் தாங்கள் சென்ற பயண வழியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது, அதேபோல் தங்களுக்கு உதவும் மனிதர்களையும் அது மறக்காது. 
 

ஆந்திரா யானைகள் கோடைகாலத்தில் கோதவரி ஆற்றங்கரையில் இனப்பெருக்கத்துக்காக செல்லும். அது முடிந்ததும் மீண்டும் பயணத்தை துவங்கும். யானைகளின் வழித்தடம் அழிப்படுவதால் அவை பயணம் செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. அதேப்போல் காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதால் குரங்குகள் காட்டைவிட்டு வெளியே வருகின்றன. நகரங்களுக்கும் படையெடுக்கின்றன. ஏன் எனில் காடு சுருங்க, சுருங்க அதற்கான உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் யானை, குரங்கு, காட்டுப்பன்றிப்போல் மற்ற விலங்குகளும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ள பகுதிக்கு வருகின்றன. 
 

தற்போது வரும் எட்டுவழிச்சாலையால் அழிப்படும் காடுகளில் உள்ள விலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது மறுக்க முடியாதது, இதற்கு அரசு என்ன மாற்று திட்டம் வைத்துள்ளது என்பது தெரியவில்லை என்றார் கவலையாக.
 

 

 

எட்டுவழிச்சாலை அமைக்கப்படும் வழியில் 2791 ஹெக்டர் விவசாய நிலங்கள் நேரடியாக அழிகின்றன. அதேநேரத்தில் ஜருகுமலை, மஞ்சவாடிகாடு, ராவந்தவாடி, ஆனந்தவாடி, ஆலாலயமங்களம், நம்பேடு, சிறுவஞ்சூர் பாதுகாக்கப்பட்ட வனங்கள் அழித்து அதன் வழியாகத்தான் சாலை போடப்படவுள்ளன. இந்த சாலைக்கு அருகே வண்டலூர் விலங்கியல் பூங்கா, சாத்தனூர் முதலை பண்ணை, குரும்பட்டி விலங்கியல் பூங்கா உள்ளது என திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

சுமார் 300 ஹெக்டர் காடு அழிப்படுவதோடு அங்கு வாழும் ஆயிரக்கணக்கான விலங்குகள், நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும். விவசாயிகள், பொதுமக்களின் சாபத்தையும், கண்ணீரையும் கண்டுக்கொள்ளாத எடப்பாடி அரசு அந்த ஒற்றை யானையுடன் சேர்ந்த மற்ற விலங்குகளின் கண்ணீரையா கண்டுகொள்ளப்போகிறது?.
 


 

சார்ந்த செய்திகள்