டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என கடலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 41 பேரின் உமிழ்நீர் மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் விருத்தாசலத்தில் 4 பேர், பரங்கிப்பேட்டையில் 2, பண்ருட்டியில் 3, காட்டுமன்னார்குடியில் 2, வடலூர்1, என முதற்கட்டமாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 125 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வருகின்றனர். அவர்களில் 112 பேரின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், நேற்று வரை 86 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளி வந்தன. அதில் விருத்தாசலத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் உறவினர் குழந்தையான 3 வயது குழந்தை மற்றும் காட்டுமன்னார்குடியில் தொற்றுக்கு ஆளானவரின் மனைவி என மேலும் இருவருக்கு தொற்று உறுதியானது, இதனால் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று, முதல் கட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதியாகி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 28 பேரின் உமிழ்நீர் மற்றும் இரத்த மாதிரிகள் மீண்டும் சோதனைக்காக அனுப்பப்பட்டதில் விருத்தாசலத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த மூவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள், அவர்களது குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 279 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 250 பேரின் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், 231 பேருக்கு தொற்று இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இவர்களை தவிர இன்னும் 29 பேரின் பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களிடையே அச்சம் படர்ந்துள்ளது. அத்துடன் மாவட்டத்திலேயே கரோனோ தொற்றுடையவர்களின் எண்ணிக்கை விருத்தாசலத்தில் 6 ஆக அதிகரித்துள்ளதால், விருத்தாசலம் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.