
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், யங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை, உலகின் முக்கிய நாடுகளுக்குச் சென்று மத்திய அரசு சார்பாக முடிவு செய்துள்ளது. இதில், நாடாளுமன்ற எம்.பிக்கள் அடங்கிய 7 குழுவின் தலைவர்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
பா.ஜ.க.வின் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸின் சசி தரூர், தி.மு.க.வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, ஐக்கிய ஜனதா தள எம்.பி சஞ்சய் குமார் ஜா ஆகியோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் 5–8 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், வரும் மே 23ஆம் தேதி தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இந்த குழு அமைக்கும் விதமாக 4 எம்.பிக்களின் பெயர்களை தேர்வு செய்யுமாறு காங்கிரஸிடம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், கெளரவ் கோகாய், ஆனந்த் ஷர்மா, அம்ரீந்தர் சிங் மற்றும் சையத் நசீர் உசேன் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் பரிந்துரைத்தாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூர் பெயரை, 7 குழுத் தலைவர்களின் பட்டியலில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “மிகவும் துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தலைமை பரிந்துரைத்த நான்கு பெயர்களில் ஒன்று மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இது மோடி அரசாங்கத்தின் முழுமையான நேர்மையற்ற தன்மையை நிரூபிக்கிறது. மேலும், தீவிரமான தேசிய பிரச்சினைகளில் பா.ஜ.க எப்போதும் விளையாடும் மலிவான அரசியல் விளையாட்டுகளைக் காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சேர்க்கப்பட்ட எம்.பி.க்களை கட்சி தடுக்காது. அவர்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்வார்கள். பிரதமர் மற்றும் பாஜகவின் பரிதாபகரமான நிலைக்கு காங்கிரஸ் இறங்காது. அது எப்போதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறந்த மரபுகளை நிலைநிறுத்தும், பாஜக செய்வது போல தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் கட்சி சார்புடைய அரசியலை விளையாடாது” என்று கூறினார். இது ஒருபுறமிருக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியதாவது, “சமீபத்திய நிகழ்வுகள் குறித்த நமது நாட்டின் பார்வையை முன்வைக்க, ஐந்து முக்கிய தலைநகரங்களுக்கு அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்த இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீப காலங்களில் பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் சசி தரூர் தொடர்ந்து பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை சசி தரூர் பாராட்டி பேசியிருந்தார். பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மத்திய அரசு நடத்திய தாக்குதல் சிறப்பானவை என்றும், பாகிஸ்தானுடனான பிரச்சனையை பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டார் என்றும் இதற்கான முழு மதிப்பெண்களையும் அவருக்கு கொடுக்கிறேன் என்று பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ.க அரசையும் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த சலசலப்புக்கு மத்தியில், காங்கிரஸ் பரிந்துரைந்த பெயர்களை தவிர்த்து சசி தரூருக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.