
கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இவரது சொந்த ஊரில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை விழா நடைபெறும். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, தனது குடும்பத்தினர் 8 பேருடன் கோவையில் இருந்து ஆம்னி வேனில் சென்றுள்ளார்.
சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோர தடுப்புச் சுவர் இன்றி இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் வாகனம் கவிழ்ந்தது. இதில் கார், அந்த கிணற்றுக்குள் மூழ்கியது. உடனடியாக, வாகனத்தில் இருந்த மூன்று பேர் வெளியே தப்பிச் சென்று, இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறியுள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கிராம மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர், கிணற்றுக்குள் சென்று வாகனத்தில் சிக்கியிருந்த மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த ஆம்னி வேன் கிணற்றின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியிருந்ததால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனையறிந்த அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்ட நிகழ்வு இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் குறித்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து கூபா டைவிங் வீரர்கள் அழைத்து வரப்பட்டு மீட்பு பணியை மேலும் துரிதப்படுத்தினர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஆம்னி வேனில் இருந்த 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதில், ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் இறந்துள்ளனர். ஆலய பிரதிஷ்டை விழாவிற்கு குடும்பத்தோடு சென்ற போது வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.