Skip to main content

நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாக புகார்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"We will go anywhere if we ask for Rs. 50 per bundle or Rs. 100 per bundle" - Farmers who are unable to sell the grown paddy

 

விருத்தாச்சலம் அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் தர மறுத்ததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம்.

 

இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் நெல்லை, இயந்திரத்தின் மூலம் தூற்றி, கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார்  கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயி, “வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது. ரூ.30 ரூபாய் தருகிறேன்” என கூறியுள்ளார்.

 

ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிச்சாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளிகள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிச்சாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார். 

 

வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நாங்க எங்கையா போவோம் என ஏழை, எளிய விவசாயிகள் செய்வதறியாது நிற்கின்றனர். 

 

லஞ்சம் தர மறுத்த விவசாயின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்கி மண்ணான 126 டன் நெல்; சட்டத்துறை அமைச்சர் தொகுதியில் அவலம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

மனிதனின் வயிற்றுப் பசியை போக்கி பட்டினியை இல்லாமல் செய்ய ஒவ்வொரு விவசாயியும் சேற்றில் இறங்கி உழுது, நடவு நட்டு, பூச்சி, இயற்கை சீற்றங்களில் பாதுகாத்து வியர்வைத் துளிகளை நெல்மணிகளாக கொடுக்கிறார்கள். இத்தனை உழைப்பிற்கு பின்னால் வரும் நெல் மணிகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுக்கும் போது ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்து பல நாட்கள் காத்திருந்து பணம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். இதனை சாதகமாக பயன்படுத்தும் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று குறைந்த விலைக்கு வாங்கி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்கும் சம்பவங்களும் உண்டு.

 

கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை வட்ட அளவிலான பாதுகாப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாத்து அரிசி அறவைக்கும் மார்டன் ரைஸ் மில்களுக்கும் அனுப்பும் பணியை செய்ய அதிகாரிகள் குழுவே உள்ளது. இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை திறந்தவெளி குடோன்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பின்றி வைத்து, மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூடைகள் நனைந்து நாசமாகி, பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.

 

இந்த வகையில் தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் தொகுதியில் உள்ள திருமயம் தாலுகா வட்டக்கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 4507 மூடைகள் அதாவது ரூ.40 லட்சம் மதிப்புள்ள 126 டன் நெல் மணிகள் மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனது. இந்த சம்பவத்தில் கிடங்கு பாதுகாப்பு அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணான மனிதர்கள் பயன்படுத்த தகுதியற்ற 4,507 இந்த நெல் மூட்டைகளை மண்ணோடு மண்ணாக பாதுகாப்பு குடோனில் அள்ளி குவித்து வைத்து அதனை தனியார் வியாபாரிகளுக்கு கால்நடை தீவனங்களுக்கு விற்பனை செய்ய டெண்டர் அறிவித்திருந்த நிலையில், நேற்று நவம்பர் 20 ந் தேதி டெண்டர் கடைசி நாள் இன்று 21 ந் தேதி டெண்டர் திறப்பு நாள். ஆனால் ஒருவர் ஒரு வியாபாரி கூட டெண்டர் எடுக்க முன்வரவில்லை.

 

விவசாயிகளின் வியர்வை துளியில் விளைந்து அதிகாரிகள் அலட்சியத்தால் மண்ணாகிப் போன நெல் மணிகளை குப்பையாக்கி அரசு பணத்தை விரயமாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை என்னவோ? தனியார் மில் நிர்வாகங்களை அணுகும் அதிகாரிகள் கொஞ்சமாவது டெண்டர் எடுங்கள். அரசுக்கு கணக்கு காட்டணும், பிறகு நல்ல நெல் அறவைக்கு வரும் போது ஈடுசெய்கிறோம் என்று கெஞ்சி வருகிறார்களாம். ஆனால் மில் நிர்வாகத்தினரோ மண்ணை அள்ளிப் போய் நாங்க என்ன செய்றது என்கிறார்களாம். இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் திணறி வருகின்றனர். அரசுக்கு கணக்கு காட்ட குடோன்களில் அள்ளி குவித்து வைத்துள்ள மக்கிய நெல்மணிகளை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கின்றனர் மாவட்ட அதிகாரிகள்.

 

விவசாயிகளிடம் ஈரப்பதம், கமிஷன் என்று கறார் காட்டும் அதிகாரிகள், இப்பொழுது இவ்வளவு மூடைகளை வீணாக்கி உள்ளதை ஏற்க முடியாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது தொகுதியில் நடந்த அவலத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

 

 

Next Story

புதிய முயற்சியில் நெல் கொள்முதல் நிலையம்; மகிழ்ச்சியில் விவசாயிகள் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

paddy consuming center  in pudukkottai district annavasal union 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையம் ஒன்றில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை கமிசனாக கொடுக்க வேண்டியுள்ளது. கமிஷன் கொடுக்க மறுத்தால் நெல் கொள்முதலை நிறுத்துவது வழக்கமான குற்றச்சாட்டுகளாக உள்ளது. அதே போல அரசியல்வாதிகளும் கமிஷனுக்காக கொள்முதல் நிலையங்களை கொண்டு வருவதும் வழக்கம். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள பரப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கமிஷன் இல்லை; விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல்; அரசியல்வாதிகளுக்கு இடமில்லை; வரிசைப்படி கொள்முதல்; யாருக்கும் முன்னுரிமை கிடையாது; வியாபாரிகளின் நெல் கொள்முதல் இல்லை என விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் நெல் கொள்முதல் சங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க 4 கண்காணிப்பு கேமராக்களை வைத்து ‘நீரிணை பயன்படுத்துவோர் சங்கமே’ சிறப்பாக நடத்தி வருகிறது.