
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள பனையப்பட்டி காவல் சரகத்திற்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, தனது குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்று வேலை செய்து வருகிறார். அவரது 20 வயது மகள், இலுப்பூர் மேட்டுச்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில், நர்சிங் மாணவிக்கும் அதே கல்லூரியில் வேறு ஒரு பாடப் பிரிவில் படிக்கும் சிலம்பரசன் என்ற மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நெருங்கிப் பழகிய மாணவனும் மாணவியும் தங்கள் குடும்பம், படிப்பை மறந்து ரொம்பவே நெருங்கிவிட மாணவி கர்ப்பமானார். இதை வெளியே தெரியாமல் மறைத்து மாணவி உடைகள் அணிந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மாணவிக்கு, இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், தான் கல்லூரியில் படித்ததை வைத்து தானே சுய பிரசவம் பார்த்துக் கொண்டார்.
பிறந்த குழந்தை மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்த அந்த மாணவி, வீட்டு அருகிலேயே கையால் மண்ணை தோண்டி தனக்கு பிறந்த குழந்தையை அறைகுறையாக புதைத்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்த நேரத்தில், அந்த வழியாக ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்ட அந்த பெண், ஓடிச் சென்று பார்த்த போது பாதி மண்ணில் மறைந்திருந்த குழந்தையின் அழுகுரல் என்பதை அறிந்து உடனே குழந்தையை மீட்டு பனையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து புதுக்கோட்டையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து பனையப்பட்டி போலீசார், மாணவியையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து காதலனான கல்லூரி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.