
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சுற்றுலாத் தளங்கள், இந்திய ராணுவ நகர்வுகள் குறித்து ஜோதி, பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு தகவல் பரிமாறி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்று அலி எஹ்வான், ஷாகிர், மற்றும் ராணா ஷாபாஸ் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை ஜோதி சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில், ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மட்டுமல்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதில், ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷை சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நாடு கடத்திருந்தது குறிப்பிடத்தக்கது.