கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலை, தழை ஆடை அணிந்து தரையிறங்கிய மலை வாழ் பழங்குடியினர்

நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் சமீபமாக உள்ள தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது ஆதிவாசி மலைவாழ் பழங்குடியினரான காணிகள் என்றழைக்கப்படும் சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றார்கள்.
அடிப்படை வசதிக்குறைவு வாழ்வாதாரம். உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் தவிக்கும் அம்மக்கள், அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் போகவே, திங்கள் கிழமைக் குறைதீாக்கும் நாளில் நெல்லை மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு அந்த சமூகத்தின் ஆண்கள். பெண்கள் சிறுவர்கள் இலை தழை ஆடை அணிந்து வில், அம்புடன், கோரிக்கை மனுவோடு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
தமிழக ஆதிவாசிகளின் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலர் ஆறுமுகம். தலைமையில் அணி திரண்ட மலை வாழ் மக்கள், கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டதுடன் தொடர்ந்து மனுவும் அளித்தனர்.
அந்த மனுவில் பாபனாசம் மேலணைப் பகுதியில் குறு அங்கன்வாடிப் பணி, பழங்குடியினருக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் 2006 வனப் பாதுகாப்புச் சட்டத்தினடிப்படையில் அப்பகுதி மக்களுக்குப் பட்டா அளிக்க வேண்டும். விக்கிரமசிங்கபுரம் 9 வது வார்டு பகுதியை பழங்குடியினருக்கு என்று அறிவிக்க வேண்டும் குடி நீர், மின் இணைப்பு, சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தரவேண்டும் எனக் கோரிக்கையாகக் குறிப்பிட்டிருந்தனர். காலையில் ஆரம்பித்த போராட்டம் மதியம் வரை நீடித்தது. ஆதிவாசிகளின் ஆடையுடன் குழந்தைகளோடு தரையிறங்கிய மலைவாழ் மக்களின் கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் பார்ப்பவர்கள் மனதில் நெருடலைக் கிளப்பியிருக்கிறது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்