புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
புதுக்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து வாய்திறக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் திங்கள் கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை ஆகியோர் பேசினர். மாவட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுப்பணத்தை பலகோடி செலவுசெய்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில்; நடத்தப்பட்டது. முழுக்க, முழுக்க கட்சியின் பொதுக்கூட்டத்தைப் போலவே நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசு ஊழியர்கள் இரவு, பகலாக பல நாட்கள் வேலை வாங்கப்பட்டனர். தனியார் பள்ளி வாகனங்கள் பெருமளவிற்கு ஈடுபடுத்தப்பட்டன. எடப்பாடி அரசின் பல்வேறு தவறுகளை மறைக்கும் விதமாக நடத்தப்பட்ட இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கென்று எந்த உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து ஒருவார்த்தைகூட முதல்வரின் உரையில் இடம்பெறவில்லை. மக்களின் உணர்வுகளை கொஞ்சம்கூட மதிக்காத நடவடிக்கையாகவே இதைப்பார்க்க வேண்டியுள்ளது. திட்டத்தை அரசு கைவிடுகிறதோ என்ற கேள்வியை இது ஏற்படுத்துகிறது. எனவே, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் குறித்து தமிழக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோட்டைப்பட்டினத்தில் மட்டும் 6 பேர் டெங்கு பாதிப்பினால் இறந்துள்ளனர். முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெங்கு கட்டுக்குள் இருப்பதாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளை போதுமான படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும்.
புதுக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் எந்தவித உயர் சிகிச்கையும் முறையாக அளிக்கப்டுவதில்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனையில் எந்தவித சிகிச்சை முறை இருந்ததோ அதுதான் தற்பொழுதும் தொடர்கிறது. இப்பொழுதும் தஞ்சாவூர் உள்ளிட்ட வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக நோயாளிகள் பரிந்துரைக்கப்படும் அவல நிலை தொடர்கிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் உயர்சிகிச்சை அளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தபடி புதுக்கோட்டை அரசு முத்துலெட்சுமி மருத்துவமனையும் ராணியார் மகக்பேரு மருத்துவமனையும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இரா.பகத்சிங்