Skip to main content

கலப்பட நெய் தீபத்துக்கு தடை

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
கலப்பட நெய் தீபத்துக்கு தடை

சிவகங்கையை சேர்ந்த ஆனந்தவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயில்களில் ஏற்றுவதற்காக நெய் தீபம் விற்கப்படுகிறது. பெரும்பாலும் விலங்கு கொழுப்பு, கலப்பட எண்ணெய், ரசாயன பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் போலி நெய்யே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களிலான சூடம், சாம்பிராணியும் விற்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கோயில்களில் போலி நெய் தீபம், சூடம் மற்றும் சாம்பிராணி போன்ற பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில், ‘‘தமிழக கோயில்களில் நெய் விளக்குகளில் வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்கு கொழுப்பு கலந்த எண்ணெய், வேதியியல் பொருட்கள் கலந்த நெய் தீபம் என்ற பெயரில் விற்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனத்திடம் தரச்சான்று பெற வேண்டும். நெய் தீப விற்பனை உரிமம் பெற்றவரின் விற்பனையில் கலப்பட நெய் இருப்பது உறுதியானால் ஏல உரிமத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். உரிமம் ரத்தாகும் கோயில்களில் ஆவின் மூலம் தட்டுப்பாடின்றி நெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 7க்கு தள்ளி வைத்தனர்.

சார்ந்த செய்திகள்