மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம் விவகாரம்:
புதுச்சேரி அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேரை நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக 2016-17 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக கூறி புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரியுலுள்ள 4 நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்துவரும் 778 மாணவர்களை நீக்க வேண்டும் என்ற கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியிட்ட எம்.சி.ஐ. கடிதப்போக்குவரத்தின் அடிப்படையில், புதுச்சேரி அரசு செப்டம்பர் 14ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மருத்து மாணவர்களான பி.மானஸ்வினி, ஆர்.திவ்யா, எஸ்.விவேக், எம்.விக்னேஷ் உள்ளிட்ட 108 பேர் இரண்டு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். அந்த மனுவில் எம்.சி.ஐ. உத்தரவை ரத்து செய்து தங்களது மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தபோது, “ நீட் தேர்வு அடிப்படையிலேயே இந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கோ, கல்லூரிகளுக்கோ எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை, மேலும் ஒரு ஆண்டு கழித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. அதேபோல் சம்பந்தப்பட்ட புகார் மீது எந்த விசாரணையும் செய்யாமல் மாணவர்களை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுக்ளதால், மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.இதையடுத்து எம்.சி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கவுன்சில் விதிமுறைகளை மீறி ல் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டதாகவும் அதில் தலையிட தேவையில்லை என்றும், வழக்கு குறித்து விரிவான பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென” கோரினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில்
“மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை 2016 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி குழுபரிந்துரை வழங்கி ஒரு வருட காலம் நெருங்கியுள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி எம்.சி.ஐ. அனுப்பிய தகவலின் அடிப்படையில் புதுச்சேரி அரசு செப்டம்பர் 14 ஆம் தேதி 778 மாணவர்களுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கோ அல்லது கல்வி நிலையங்களுக்கோ போதிய வாய்ப்பு வழங்காமல் எடுக்கப்பட்ட முடிவால், கடந்த ஒரு வருடமாக படித்துவரும் மாணவர்வர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே எம்.சி.ஐ. பரிந்துரையின் அடிப்படையில் 778 மருத்துவ மாணவர்கள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க அக்டோபர் 23ஆம் தேதிவரை இடைக்காலத் தடைவிதிக்கிறேன். வழக்கு குறித்து 2 வார காலத்தில் மத்திய அரசு, புதுவை அரசு, புதுச்செரி சுகாதாரத்துறை செய்லாளர், புதுச்சேரி பல்கலைகழகம், பிம்ஸ், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர் சங்கத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 23கஆம் தேதிக்கு ஒத்திவைததார்.
-சி.ஜீவா பாரதி