
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூர் திமுக சார்பில் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ''தமிழக முதல்வரின் ஆட்சியில் தொடரும் சாதனைகளாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாத மீதம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இனி தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை கண்டிப்பாக வரும். கலைஞர், சோனியா காந்தி ஆகியோர்களால் கொண்டு வரப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு முற்றிலும் நிறுத்திவிடுவதற்கான சதி செயலில் ஈடுபடுகிறது. 40 கோடியாக இருந்த வேலை நாட்களை தற்போது 12 கோடி வேலை நாட்களாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. தமிழக உரிமைகளை மீட்டிட, நல்லாட்சி தொடர்ந்திட மு.க.ஸ்டாலினை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என்று கூறினார்.
இக்கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை கையேடு களை அமைச்சர் ஐ.பெரியசாமி அனைவருக்கும் வழங்கினார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் வனிதா தங்கராஜன், சிதம்பரம் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.