‘நல்ல மனநிலையுடன் நீதிமன்றத்தில் சரணடைவேன்’ - மௌனம் களைத்த ஹனிபிரீத் சிங்!
தனது பக்தைகள் இருவரைக் கற்பழித்த குற்றத்திற்காக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹரியானாவின் சிபிஐ நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய கலவரம் உருவானது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்தக் கலவரத்தைத் தூண்டியதாக தேரா சச்சா சவுதா அமைப்பின் மேலாளர் மற்றும் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங்கை அறிவித்தது ஹரியானா காவல்துறை. இதனிடையே தேரா சச்சாவின் மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆனாலும், ஹனிபிரீத் தலைமறைவு வாழ்க்கையே வாழ்ந்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழங்கப்பட்ட முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ஹனிபிரீத் அளித்துள்ள பேட்டியில், ‘என்னைக் குற்றவாளி என அழைப்பது முற்றிலும் தவறானது. எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் ஒரு தனிப்பெண்ணாக நான் எப்படி படைகளுக்கு மத்தியில் செல்லமுடியும்? என்னைத் தவறானவள் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த உலகம் பார்க்கவேண்டிய எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. கலவரம் என்னால் தூண்டப்பட்டது என குற்றம்சாட்டுபவர்களிடம், எனக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மை. எனக்கும் என் தந்தைக்குமான உறவை பலர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். என் அப்பா நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்போம். எனது மனநிலை சரியாக இருக்கும்போது பஞ்சாப் அல்லது ஹரியானா நீதிமன்றத்தில் சரணடைவதற்கு தயாராக இருக்கிறேன். எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை விரைவில் அனைவரின் மத்தியிலும் சமர்ப்பிப்போம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்