
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் போராட்டங்கள், மறியல்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த 5 ந் தேதி இரு தரப்பினர் மோதலாக வெடித்தது. இதில் போலீசார் முன்னிலையிலேயே பலர் காயமடைந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து வடகாடு காவல் ஆய்வாளர் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இரு தரப்பிலும் இருந்து புகார்கள் கூறப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வடகாடு காவல் ஆய்வாளர் தனபாலன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகும் ஒரு நாள் பணியில் இருந்தார். இந்நிலையில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வடகாடு காவல் நிலையப் பணிகளையும் கவனிக்க கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை வெளியான 36 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றப் பட்டியலில் வடகாடு காவல் ஆய்வாளராக இருந்த தனபாலன் திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி மாவட்டம் முசிறி (2) டிடி பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அனந்த பத்மநாபன் வடகாடு காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.