
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் பேசுகையில், ''தவறு நடந்தது அதிமுக ஆட்சிக் காலத்தில். அதிமுக ஆட்சியில் தான் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண்ணின் பெயரையும் கல்லூரியையும் வெளியில் சொன்னார்கள். அதுவும் ஒரு உயர்ந்த அதிகாரி சொன்னாரா இல்லையா. நான் பாதிக்கப்பட்ட ஒரு பெண். நான் ஒரு புகாரை கொடுக்கிறேன். நீங்கள் அதையே வெளியே சொன்னால் மற்றவர்கள் யார் வந்து புகார் கொடுக்க வருவார்கள். இது முழுக்க முழுக்க அதிமுக எடப்பாடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு மிக அருவருக்கத்தக்க கொடுமையான செயல். அதில் அவருடைய கட்சிக்கார பிள்ளைகள் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அதை முடக்குவதற்கு சரியான விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள்.
இன்று சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ள சாமானிய மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் சிபிஐ கொடுத்த ரிப்போர்ட்டுகள் அடிப்படையில் இன்னைக்கு ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். வரப்போகின்ற காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, அந்த குற்றச் செயலை செய்ய முன்வரக்கூடியவர்கள் பயப்படுவதற்கு ஒரு சாமானியனுக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இது என்னை பொருத்தவரை அவருக்கு பிறந்தநாள் பரிசாக கோர்ட் கொடுத்துள்ளது என நான் நினைக்கிறேன்'' என்றார்.