
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் வீடுகள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு எனப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த மோதல் சம்பவத்தையடுத்து வடகாடு காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு தரப்பில் 21 நபர்களும் மற்றொரு தரப்பில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும், இரு தரப்பிலும் மோதல்கள், பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு இந்த மோதல் பிரச்சனைக்கு மூலக்காரணமாக கருதப்படும் அரசு புறம்போக்கு, கோயில் நிலம், அண்ணா கைப்பந்து கழகம் பயிற்சி மைதானம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வடகாடு காவல் ஆய்வாளர் (பொ) புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியருக்கு நேற்று 13 ந் தேதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நாளை 14 ந் தேதி புதன் கிழமை காலை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா இரு தரப்பிலும் தலா 10 பேர் மற்றும் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர், வடகாடு காவல் ஆய்வாளர் (பொ) ஆகியோர் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா வடகாடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த சமாதான கூட்டத்தில் இருதரப்பிலும் சமாதானம் ஏற்பட்டு வம்பு, வழக்கு இல்லாமல் பழையடி சகோதரத்துவத்துடன் வாழ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இரு தரப்பிலும் சமாதானம் விரும்பும் நல்ல உள்ளங்கள்.